மத்திய அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் பணமதிப்பு அதிகரிப்பு - மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் பண மதிப்பை 3 மடங்காக அதிகரித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் பணமதிப்பு அதிகரிப்பு - மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்கள் இந்திய பிரதிநிதிகள் அல்லது நிறுவனங்களிடம் இருந்தும், வெளிநாட்டு பிரதிநிதிகளாக இருந்தால் வெளிநாட்டு பங்களிப்பு பரிசு அல்லது அன்பளிப்பு விதிகளுக்கு உட்பட்டும் பரிசு பொருட்களை பெறுவதற்காக 2012-ம் ஆண்டு ஒரு விதி உருவாக்கப்பட்டது. இந்த விதிகளில் உள்ள அம்சங்கள் அவ்வப்போது திருத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தற்போது மத்திய அரசு ஊழியர்களின் பரிசு கொள்கை விதியில் பல திருத்தங்களை செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் பண மதிப்பு சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்கள் அனைவரும் ரூ.1,500 வரை மதிப்புள்ள பரிசு பொருட்களை பெறலாம் என இருந்தது. இப்போது இந்த பண மதிப்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் உள்ள பரிசு பொருட்களை அரசு அனுமதியின்றி பெறக்கூடாது.

அதேபோல குரூப் சி பிரிவு ஊழியர்கள் ரூ.2 ஆயிரம் வரை மதிப்புள்ள பரிசு பொருட்களை அரசு அனுமதியின்றி பெற்றுக்கொள்ளலாம். இது முன்பு ரூ.500 ஆக இருந்தது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி ஆகிய 3 பணிகளுக்கு இணையாக இந்த பண மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

பரிசுகள் பட்டியலில் இலவச போக்குவரத்து, விடுதிகளில் தங்குதல், விருந்து மற்றும் இதர பணம் சம்பந்தமான சலுகைகள் அடங்கியுள்ளன. அரசு ஊழியருடன் அலுவலக ரீதியிலான தொடர்பு இல்லாத நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரிடம் இருந்தும் இந்த பரிசு பொருட்களை பெறலாம். சாதாரண உணவு, உதவி செய்தல், இதர சமுதாய ரீதியிலான விருந்தோம்பல் ஆகியவை பரிசு பட்டியலில் அடங்காது.

அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் இருந்து பரிசுகளை பெறுவது அல்லது பரிசுகளை வைத்திருப்பதில் ஆயிரம் ரூபாய்க்குள் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, அதற்குமேல் மதிப்புள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளின் பரிசுகளை வாங்கக் கூடாது, வாங்கினால் அவை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று விதியில் கூறப்பட்டிருந்தது.

அரசு ஊழியர்கள் பகட்டான விருந்தோம்பல் அல்லது அடிக்கடி விருந்தோம்பல் ஆகியவைகளை அலுவல்ரீதியான தொடர்பு உள்ள எந்த தனிநபரிடம் இருந்தோ, தொழில், வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தோ பெறுவதை தவிர்க்க வேண்டும்.

திருமணம், திருமண நாள், இறுதி சடங்குகள், மதரீதியிலான நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் அரசு ஊழியர் அலுவல்ரீதியான தொடர்பு இல்லாத தனிப்பட்ட நண்பர் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பரிசு பொருட்களை பெறலாம். ஆனால் அவை விதிமுறையில் கூறப்பட்டுள்ள பண மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அதுபற்றி அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com