கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது
Published on

புதுடெல்லி,

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன.

மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படுபாதக செயல்களை அரங்கேற்றி வரும் கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக உயர்ந்தது. இது மத்திய-மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,065 ஆகும். இதன் மூலம் மொத்த சாவு எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை இரவில் வெளியிடப்பட்டது. இதில் இரவு 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 41 லட்சத்து 60 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் உலக அளவில் அதிக கொரோனா தொற்று கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை எட்டியது. முன்னதாக 2-வது இடத்தில் நீடித்து வந்த பிரேசில் நாடு 41 லட்சத்து 23 ஆயிரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 64 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் உச்சம் மற்றும் உலக அளவிலான பாதிப்பிலும் தொடர்ந்து ஏறுமுகம் போன்றவற்றால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 73 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு நேர்மறையான தாக்கமாக பார்க்கப்படுகிறது. இவர்களையும் சேர்த்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலையில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர் விகிதம் 77.32 சதவீதமாக உள்ளது. இதைப்போல இறப்பு விகிதமும் 1.72 என்ற அளவில்தான் உள்ளது. இது உலக அளவில் மிகவும் குறைந்த சதவீதம் என மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைப்பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டின் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இது மொத்த பரிசோதனை எண்ணிக்கையை 4 கோடியே 88 லட்சத்து 31 ஆயிரத்து 145 என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

இதற்கிடையே டெல்லி, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 35 மாவட்டங்களில் அதிக நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதம் இருப்பதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

எனவே இந்த மாவட்டங்களில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து நோயாளிகளையும், இறப்பு விகிதத்தையும் குறைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அந்தந்த மாநில சுகாதார செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆய்வுக்கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com