சீன எல்லையில் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்

சீன எல்லையில் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீன எல்லையில் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்
Published on

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின், ஜோர்காட் நகரில் விமானப்படை தளம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நேற்று நண்பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் ஒன்று அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது.

விமானப்படையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானத்தில் விமானப்படை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என 13 பேர் இருந்தனர். இந்த விமானம் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் அமைந்துள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விமானப்படை அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானப்படை விமானம் மயமான விவகாரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விமானப்படை துணை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாயமான விமானத்தை தேடும் பணிகளை முடுக்கி விட்ட அவர், அதில் இருந்த பயணிகளின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், விமானம் எங்கு உள்ளது? அதன் நிலை என்ன? என்பது பற்றி இன்று கண்டறிய முடியாததால், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டதாகும். விமானப்படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் கடந்த 40 ஆண்டுகளாக பணியில் இருந்தது. விபத்தில் சிக்கியுள்ள இந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி குறித்து தெரியவில்லை. இதனால் விமானப்படையினர் மத்தியில் பெரும் சோகம் நிலவியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com