

ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கரொவ்லி நகரில் உள்ள கைலா தேவி என்ற இடத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. ராணுவத்தின் வழக்கமான ரோந்து நடவடிக்கையாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து சேதத்தை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் அந்த பகுதியில் இருந்த காலியான நிலப்பகுதியில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரை இயக்கி அந்த பகுதியில் இருந்து சென்றனர். இதையடுத்து திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.