

புதுடெல்லி,
இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கடற்படை கமாண்டர்களின் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என பெருமிதம் தெரிவித்தார். ராஜ்நாத் சிங் தனது உரையில் கூறியதாவது:-
தேசத்தின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை வகித்த பங்கை நான் பாராட்டுகிறேன். பதற்றமான பகுதிகளிலும் கடற்படை அதன் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலை நிறுத்தும் செயல்திறன் மூலம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள கடற்படை தயாராக இருப்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் கொரோனா தொற்றால் எழும் சவால்களை ஏற்றுக்கொண்டு நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகளில் இந்திய கடற்படை தொடர்ந்து முன்னேறி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரான், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கி தவித்த சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை ஆபரேஷன் சமுத்ரா சேது திட்டம் மூலம் இந்தியா அழைத்து வந்து தேசத்தின் நலனுக்காக விரிவாக பங்களித்த கடற்படையை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
பாதுகாப்பு தளங்களுக்கான உள்நாட்டுமயமாக்கல் செயல்பாட்டில் கடற்படை முன்னணியில் இருப்பதும் பாராட்டுக்குரியது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.