உக்ரைனில் காயமடைந்த மாணவர் நாளை நாடு திரும்புகிறார்; மத்திய மந்திரி தகவல்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஹர்ஜோத் சிங் நாளை நாடு திரும்புகிறார் என மத்திய மந்திரி வி.கே. சிங் தெரிவித்து உள்ளார்.
உக்ரைனில் காயமடைந்த மாணவர் நாளை நாடு திரும்புகிறார்; மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 11வது நாளாக நீடித்து வருகிறது. போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து சிறப்பு விமானங்களில் இதுவரை 15,900 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. உக்ரைனில் பிற பகுதியிலுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டுக்கு வந்து சேரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியர்களை மீட்க போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்த சூழலில் உக்ரைனில் வேன் ஒன்றில் 3 பேருடன் சென்ற இந்தியர் ஹர்ஜோத் சிங் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை சாவடி பகுதியருகே துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவர், கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் மற்றும் வேதனையுடன் அவர் பேசிய வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடம் பேசும்போது, உக்ரைனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மாணவரின் மருத்துவ நிலையை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவரது உடல்நலன் பற்றிய சமீபத்திய நிலவரம் பற்றி அறிவதற்கான முயற்சியிலும் நம்முடைய தூதரகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், தகவலை அறிய முற்படுவதற்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் அது போர் நடந்து வரும் பகுதியாக உள்ளது என கூறியுள்ளார். உக்ரைனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மத்திய மந்திரி வி.கே. சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கீவ் நகரில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியரான ஹர்ஜோத் சிங் நாளை இந்தியாவுக்கு திரும்புவார் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com