

காத்மாண்டு,
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற மலைப்பிரதேச சுற்றுலா தலமான பொகாராவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து திரும்பும் வழியில் மக்வான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட டாமன் என்ற பகுதியில் கடந்த 20-ந் தேதி தங்கினர்.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 75 கி.மீ.க்கு அப்பால் அமைந்திருக்கும் இந்த பகுதியும் மலைக்குன்றுகள் நிறைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 மீட்டர் உயரம் கொண்ட இந்த பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட் என்ற உல்லாச விடுதியில் அவர்கள் அறை எடுத்திருந்தனர்.
இதில் ஒரு அறையில் பிரவீன் கிருஷ்ணன் நாயர் (வயது 39), அவரது மனைவி சரண்யா சசி (34), இவர்களின் மகள்கள் ஸ்ரீபத்ரா (9), ஆர்சா (7), மகன் அபினவ் (4) ஆகியோரும், ரஞ்சித் குமார் (39), அவரது மனைவி இந்து லட்சுமி (34), மகன் வைஷ்ணவ் ரஞ்சித் (2) ஆகியோருமாக 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் தங்கினர். மற்றொரு அறையில் மீதமுள்ளவர்கள் தங்கினர். அவர்களுடன் ரஞ்சித் குமார்-இந்து லட்சுமி தம்பதியின் மற்றொரு மகனான மாதவும் தூங்கினான்.
நள்ளிரவில் இந்த ஹீட்டரில் இருந்து கியாஸ் கசிந்துள்ளது. இதனால் அறையில் படுத்திருந்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் தூக்கத்திலேயே மயங்கினர். நேற்று முன்தினம் காலையில் அவர்களின் அறைக்கு சென்ற விடுதி ஊழியர்கள், 8 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து 8 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அருகில் உள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 8 பேரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்த மற்ற பயணிகள் அலறித்துடித்தனர்.