

பெங்களூரு,
கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சிவகுமார் வீட்டில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இன்று 4-வது நாளாகவும் சோதனை நீடித்தது. அவரது தம்பியும், எம்.பி.யுமான சுரேஷ் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், மந்திரியுடன் இணைந்து தொழில் நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. மந்திரியின் ஜோதிடர் துவாரகநாத் வீட்டிலும் சோதனை நடந்தது.
இன்று காலை பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள மந்திரி சிவகுமார் வீட்டுக்கு 2 ஆடிட்டர்கள் வரவழைக்கப்பட்டனர். இதில் ஒருவர் மந்திரி சிவகுமாரின் ஆடிட்டர் ஆவார். இன்னொருவர் ஜோதிடர் துவாரகநாத்தின் ஆடிட்டர் ஆவார்.இந்த 2 ஆடிட்டர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தினர். 4-நாட்களாக நீடித்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் மந்திரி சிவக்குமாருக்கு சொந்தமான 66 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதுவரை சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிவுக்கு வந்தாலும், அவரது உறவினர்கள் இல்லத்தில் சோதனை நீடித்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் சட்டத்தையும், அரசியலமைப்பையும் மீறும் நபர் நான் அல்ல. உண்மை வெளியே வரும். உரிய ஆவணங்கள் கிடைத்த பிறகு நான் பேசுவேன். நாடு முழுவதும் உள்ள எனது கட்சி தலைவர்கள் என் பின்னால் உள்ளனர். எனது கட்சியையும், கட்சி தலைவர்களையும் நான் தலைகுனிய விட மாட்டேன் என்றார்.