பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு இம்ரான் கான் விடுத்த அழைப்பை ஏற்றார் சித்து

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு இம்ரான் கான் விடுத்த அழைப்பை சித்து ஏற்பதாக அறிவித்துள்ளார். #ImranKhan
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு இம்ரான் கான் விடுத்த அழைப்பை ஏற்றார் சித்து
Published on

புதுடெல்லி,

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14-ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான முயற்சிகளில் இம்ரானின் கட்சி தீவிரமாக உள்ளது. இதனிடையே, அந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் பிடிபி கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்தி திரைப்பட நடிகரான அமீர்கானுக்கும் பிடிஐ கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் விடுத்த அழைப்பை, சித்து ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மிகச்சிறந்த மனிதர். நல்ல குணம் படைத்தவர். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி அனைவரிடமும் பழக்கூடியவர். அவரது பண்புகள் நம்பத் தகுந்தவை. இருநாடுகளிடையேயான உறவு எப்படி இருந்தாலும், என் மீது மிகுந்த மரியாதை வைத்த அவர் அழைப்பு விடுத்துள்ளார். எனவே பாகிஸ்தான் பிரதமராக கான்சாஹிப் பதவியேற்கும் விழாவில் நான் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன். இம்ரான் கான் அழைப்பு விடுத்ததை நான் மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன். இம்ரான்கான் எனக்கு அழைப்பு விடுத்தது தனிப்பட்ட முறையிலானது. அரசியல் ரீதியான அழைப்பு இல்லை. நமது அரசு மற்றும் நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நான் மதிக்கிறேன். ஆனால், இம்ரான் கானின் அழைப்பு தனிப்பட்ட ரீதியிலானது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com