

ஜம்மு,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. இந்த நடவடிக்கையால் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல்வேறு 270-அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால், படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்னாள் எம்.எல்.ஏக்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜம்மு பிராந்தியம் மற்றும் தெற்கு காஷ்மீர் செல்ல திட்டமிட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி ஏ மிர் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏக்கள் முன்னாள் மந்திரிகள், இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் இதில் அடங்குவர். இது குறித்து போலீஸ் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் மிர் பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது: ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகள் மற்றும் தெற்கு காஷ்மீரின் சில இடங்களுக்கு நாங்கள் செல்ல திட்டமிட்டு அரசிடம் அனுமதி கோரியிருந்தோம். எங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஆனால், இன்று காலை திடீரென எங்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர் என்றார். ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறும் அரசு, எங்களை அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க மறுக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.