கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த நடிகர் சோனு சூட் பதிவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி

கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த நடிகர் சோனு சூட் பதிவுக்கு கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார்.
கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த நடிகர் சோனு சூட் பதிவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி
Published on

லக்னோ,

வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவ பக்தர்கள் 'கன்வார்' யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை மேற்கொள்பவர்கள் 'கன்வாரியாக்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இந்த யாத்திரையின்போது ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பின்னர் அந்த புனித நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

இதனிடையே உத்தர பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கன்வார் யாத்திரை வரும் 22-ந்தேதி தொடங்க உள்ளதால் உத்தர பிரதேசம் முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான உத்தரவு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட், தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு கடையிலும் 'மனிதநேயம்' என்ற ஒரே ஒரு பெயர் பலகை மட்டுமே இருக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மண்டி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒப்புக்கொள்கிறேன், ஹலால் என்பதையும் 'மனிதநேயம்' என்று மாற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com