

பெங்களூரு
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக எடியூரப்பா உள்ளார். எடியூரப்பாவுக்கு 79 வயதாகிறது. இந்தநிலையில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.க்கள், அவரது வயதை காரணம் காட்டி முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று பா.ஜனதா மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலை எடியூரப்பாவுக்கு பதில் மாற்று தலைவரின், தலைமையில் எதிர்கொள்ள பா.ஜனதா மேலிடமும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை டெல்லிக்கு வரும்படி பா.ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, பெங்களூருவில் இருந்து அவர், தனது மகன் விஜயேந்திராவுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.
அதுபோல், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசனார். இந்த நிலையில், எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியை, சந்தித்து பேசிய போது, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசும்படியும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்வதற்காக தான் எடியூரப்பா டெல்லி சென்று இருப்பதாகவும், இதற்காக பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும் தகவல்கள் பரவியது.
ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா ராஜினாமா செய்யக்கோரி பா.ஜனதா மேலிடம் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விட்டார்.
பதவி விலகும் எடியூரப்பாவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கி அவரை சமாதானம் செய்யவும் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் சிலர், எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் எடியூரப்பா தனது நெருங்கிய மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் சக்திவாய்ந்த வீரசைவ-லிங்காயத் சீர் பலேஹொன்னூர் ராம்புரி சுவாமி பா.ஜனதா மேலிடம் பதவியில் இருந்து முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க முடிவு செய்தால் கட்சி எதிர்காலத்தில் மாநிலத்தில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரில் முதல் மந்திரி பி.எஸ். எடியூரப்பாவை 30 க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது திங்களேஷவர் சுவாமி கூறியதாவது:
பா.ஜ.க தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதனை தலை வணங்கி ஏற்பதாக எடியூரப்பா கூறினார். ஆனால் கர்நாடகாவில் பா.ஜ.க தற்போது பதவியில் இருப்பதற்கு காரணமே எடியூரப்பாவும், அவருக்கு உதவியாக கட்சியில் செயலாற்றி வருபவர்களும் தான்.
இதற்கு முன்பு கூட எடியூரப்பா தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தற்போது கூட அந்த வலி இருப்பதை எங்களால் உணர முடிகிறது. எடியூரப்பா மாற்றப்பட்டால் இந்த மாநிலத்தில் பா.ஜ.க அழிந்து விடும். இதனை நாங்கள் மட்டும் கூறவில்லை. மாநில மக்களும் இதனைத் தான் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கர்நாடக காங்கிரஸ் எம்.பி. பாட்டீல், தனது டுவிட்டட் பதிவில் கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றிக்கு முக்கிய முக்கிய பங்கு வகிக்கும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பெரிய தலைவர் எடியூரப்பா. அவர் டெல்லிக்குச் சென்றபோது, அவர் பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பே தகவல் கசிந்தது. அதனால் அவர் பலவீனமடைந்தார். கட்சி அவரது வயதை மதிக்க வேண்டும். சமூகத்தின் ஒரு நபராக எனக்கு இது வலிக்கிறது என கூறி உள்ளார்.
கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் வீரசைவலிங்காயத் சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.கர்நாடகத்தில் வீரசைவ-லிங்காயத் சமூகம், பெரும்பான்மை சமூகமாக திகழ்கிறது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் அந்த சமூகத்தினர் 17 சதவீதம் பேர் உள்ளனர். அந்த சமூகம் உயர் வகுப்பு பட்டியலில் உள்ளது. கர்நாடக அரசியலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சமூகமாக லிங்காயத் உள்ளது.