

புதுடெல்லி,
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தக்க வைக்கவும் , இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பாரதீய ஜனதாவும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர்களும் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், கர்நாடக தேர்தல் களம் அனல் பறக்கிறது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று சுமார் 1.50 லட்சம் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், இந்தோ திபெத்திய எல்லைப்படை பிரிவு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு வீரர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக பெரும்பாலான வீரர்கள் கர்நாடகா சென்று விட்டதாகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.