

புதுடெல்லி,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசேகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார், ஜகான் ஒரு கைகூலி என குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை எதிர்த்து அசேகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் லவ் ஜிகாத் சதி இருக்குமே என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது. இதனையடுத்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டு சென்றது.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. வழக்கு தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், புதிய திருப்பமாக அக்டோபர் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஆகஸ்ட் 16-ம் தேதி உத்தரவை கேள்விக்குட்படுத்தியது.
ஹாதியா - ஜகான் இடையே நடந்த மத இணைப்பு திருமணத்தை தடை செய்ய கேரள ஐகோர்ட்டு அதிகாரம் இல்லை என்றது சுப்ரீம் கோர்ட்டு.
பெண்ணை அவரது தந்தை கடந்த பலமாதங்களாக தன் பிடியில் வைத்திருப்பதையும் சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது.
வழக்கில் தொடர்புடைய ஹாதியாவை நவம்பர் 27 ம் தேதி நேரில் ஆஜர்படுத்த பெண்ணின் தந்தைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஹாதியா இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கின் முக்கியத்துவம் காரணமாக நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. லவ் ஜிகாத் தொடர்பாக விசாரணை செய்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் 100 பக்கங்கள் அடங்கிய தங்கள் தரப்பு அறிக்கையை தாக்கல் செய்தது. ஹாதியாவின் தந்தையின் தரப்பில் முதலில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை ஏற்கவேண்டும் பின்னர் அவரிடம் பேச வேண்டும் என வாதிடப்பட்டது.
விசாரணையின் போது ஹாதியா தனக்கு சுதந்திரம் வேண்டும் என்றார். கேரள மாநில அரசின் செலவில் நீங்கள் படிப்பை தொடர விரும்புகிறீர்களா? என சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய கேள்விக்கு நான் படிப்பை தொடர விரும்புகின்றேன், என்னுடைய கணவர் என்னை பார்த்துக் கொள்ள இருக்கும் போது மாநில அரசின் செலவில் படிக்க விரும்பவில்லை.என்றார்.