

திருவனந்தபுரம்,
கேரள சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.
14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் வருகிற ஜூன் 1ந்தேதியுடன் நிறைவடைகிறது. 15வது சட்டசபைக்கான தேர்தலில் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மற்றும் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா கேரள ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, கேரள சட்டசபைக்கான தேர்தலில் போலியாகவும் மற்றும் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் பலமுறை பதிவு செய்யப்பட்ட 4 லட்சத்து 34 ஆயிரத்து 42 பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
அவற்றை அழிக்க அல்லது முடக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கேரள சட்டசபை தேர்தலுக்காக போலியான மற்றும் பலமுறை பதிவான பெயர்களுடன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்து அலுவலக பணி விதிகளை மீறும் வகையில் உதவி புரிந்தவர்கள் உள்பட இதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து ரமேஷின் மனுவின்படி பலமுறை பதிவான பெயர்களை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திடம் கேரள ஐகோர்ட்டு இன்று கேட்டு கொண்டுள்ளது.