கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊழல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்- பாஜக

எந்த சேவையும் வழங்காமல் ரூ.1.72 கோடி பெற்றதாக தனது மகள் வீணா விஜயன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊழல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பா.ஜ.க. கூறியுள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊழல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்- பாஜக
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திலும், அதன் நிர்வாக இயக்குனரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு டைரி சிக்கியது. அதில் 'மாதப்படி' என்ற கணக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விவரங்கள் இருந்தன. அதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் நிறுவனத்தின் பெயரும் இருந்தது.

2017-ம் ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளுக்கு வீணா விஜயனின் நிறுவனத்துக்கு மொத்தமாக ரூ.1.72 கோடி வழங்கப்பட்டதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு சாப்ட்வேர் சேவையை வழங்கியதற்காக அந்த தொகை பெறப்பட்டதாக வீணா விஜயன் தரப்பில் கூறப்பட்டாலும், அப்படி எந்த சேவையும் வழங்கப்படவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் எந்த சேவையும் வழங்காமல் ரூ.1.72 கோடி பெற்றதாக தனது மகள் வீணா விஜயன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊழல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பா.ஜ.க. கூறியுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கூறுகையில், "இந்த குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் வருமான வரித்துறை எழுப்பியுள்ள கேள்விகளின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியமானது. இந்த சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளின் அடிப்படையை கண்டறிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அவசியம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com