

திருவனந்தபுரம்,
கொரோனா தகவல்களை மத்திய அரசுக்கு தினந்தோறும் வழங்குமாறு, கேரள அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை நேற்று கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில், கொரோனா புள்ளிவிவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவில்லை என்ற மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையை கேரள அரசு நிராகரித்துள்ளது.
மத்திய அரசு பொய் பிரச்சாரம் செய்வதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மந்திரி வீனா ஜார்ஜ் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தெரிவித்துள்ளபடி, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் தினசரி கொரோனா புள்ளிவிவரங்களை மின்னஞ்சல் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறோம். அப்படியிருக்கையில், மத்திய அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது.
தொற்றுநோய் பற்றிய பீதியைத் தூண்டக்கூடாது என்பதே மாநில அரசின் கொள்கை.தொற்றுநோய் பற்றிய பீதியைத் தூண்டுவது அல்ல மாறாக கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வாழ்வது தான் மாநில அரசின் கொள்கை, என்றார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, தினமும் மாலை 6 மணிக்கு கேரளாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தினசரி அறிவிப்பு வரும். இந்த நிலையில், தற்செயலாக, கடந்த வார தொடக்கத்தில் இருந்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தினசரி அறிவிப்புகளை வழங்க வேண்டாம் என்று கேரள சுகாதாரத் துறை முடிவு செய்தது.
இதனையடுத்து, மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று ஒரு கடிதம் எழுதினார். கேரள சுகாதார முதன்மை செயலாளர் ராஜன் என்.கோப்ரகாடேவுக்கு எழுதிய அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கேரள அரசு, தனது மாநில அளவிலான கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை 5 நாள் கழித்து தெரிவித்து இருக்கிறது. இது, கொரோனா மரணங்கள், பாதிப்புகள் உள்ளிட்ட நிலவரத்தை கண்காணிப்பதில் பாதிப்பு ஏற்படுத்தும்.
கொரோனா விவரங்களை நாள்தோறும் தெரிவிக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. அப்போதுதான் கொரோனா நிலவரத்தை துல்லியமாக புரிந்துகொண்டு முக்கியமான முடிவு எடுக்க முடியும். கொரோனா என்பது அதிகமாக பரவக்கூடியது.
புதிதாக உருமாற்றம் அடையக்கூடியது. எனவே, தினந்தோறும் தகவல்களை அளித்தால்தான், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நிலவரத்தை ஆய்வு செய்து வியூகம் வகுக்கலாம். ஆகவே, கொரோனா குறித்த புள்ளிவிவரங்களை நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறினார்.