காஷ்மீர் குறித்து சர்ச்சை பதிவு: கேரள எம்.எல்.ஏ. ஜலீல் மீது தேச துரோக வழக்கு -பா.ஜ.க. வலியுறுத்தல்

காஷ்மீர் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த எம்.எல்.ஏ. ஜலீல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
கேரள எம்.எல்.ஏ. ஜலீல் 
கேரள எம்.எல்.ஏ. ஜலீல் 
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில், பினராயி விஜயன் மந்திரி சபையில் கடந்தமுறை உயர் கல்வித்துறை மந்திரியாக இருந்தவர் கே.டி ஜலீல். இந்த முறை நடந்த தேர்தலிலும் இவர் வெற்றி பெற்று எம்.எம்.ஏ. ஆனார். ஆனால் தற்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இவர் மீது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் சுவப்னா சுரேஷ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்தநிலையில், கடந்த ஆட்சியின் போது மத்திய அரசின் அனுமதி இன்றி அமீரகத்தில் இருந்து மத நூல்களை இறக்குமதி செய்து கேரளாவில் வினியோகித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. மதநூல்களுடன் தடை செய்யப்பட்ட சில பொருட்களையும் அவர் கடத்தியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய அமலாக்கத்துறை இவரிடம் விசாரணை நடத்தியது.

கே.டி. ஜலீல் கேரள சபை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். இந்தக் கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் ஜலீல் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்ற விவரங்கள் குறித்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்றும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சேர்த்து இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜலீலின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார்.இந்த நிலையில் கேரள உள்ளாட்சி துறை மந்திரி எம்.வி. கோவிந்தன் கூறும்போது, கே.டி. ஜலீல் தெரிவித்தது அவரது சொந்த கருத்து. அதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்றார்.இதனிடையே கே.டி ஜலீல் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக டெல்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் வக்கீல் மணி என்பவர் புகார் அளித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com