

புதுடெல்லி,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 468-ன் கீழ் சிறார்களுக்கு பாலியல் தொல்லை உள்பட எந்தஒரு குற்றத்திற்கும் மூன்று வருடம் சிறைத்தண்டனை விதிக்கலாம். ஆனால் குற்ற சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற கால நிர்ணயம் உள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 473-ன் கீழ், நீதியின் நலன் அல்லது "தாமதமானதற்கு சரியாக விளக்கம் தெரிவிக்கப்பட்டால்" பழைய வழக்கை நீதிமன்றம் கையில் எடுக்கலாம். இருப்பினும் பாலியல் துஷ்பிரயேகம் போன்ற வன்முறைகளில் பாதிக்கப்படும் சிறார்கள் 18 வயதை எட்டிய பின்னர் புகார் தெரிவித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும். இப்போது நடிகைகள், செய்தியாளர் என பலர் #MeToo பிரசாரத்தின் மூலம் தங்களுக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவு சம்பவங்களை பொது வெளியில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தெரிவிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது; 10-15 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்கொண்டார்.
இப்போது இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேனகா காந்தி, பாலியல் தொல்லை விவகாரங்களில் புகார் தெரிவிக்க உள்ள கால நிர்ணயத்தை நீக்க சட்ட அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது என கூறியுள்ளார். இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இனி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களால் 10, 15 ஆண்டுகளானாலும் புகார் தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும். எவ்வளவு கால தாமதம் என்பது ஒரு பொருள் கிடையாது. புகார் தெரிவிப்பதற்கு அவர்களுக்கான தளம் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.