

புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, கடந்த கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஜே.இ.இ. முதன்மை தேர்வும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசுத்தரப்பிலிருந்து எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்த மாணவர்களின் மனதின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்த மாணவர்களின் மனதின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அளியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.