

புனே,
மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் இன்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில், விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் காலை 8.48 மணியளவில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது. இதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி, அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரும் பலியானார்கள்.
அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், அஜித் பவார்ஜி திடீர் மறைவு என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மாநிலம் முழுவதும் உள்ள, மக்களுக்காகவே உழைத்த அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை மராட்டியம் இழந்து விட்டது.
அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்மனதில் இருந்து இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார். அஜித் பவார், மூத்த அரசியல்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) நிறுவனர் சரத் பவாரின் மருமகன் ஆவார். மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினரும் ஆவார்.