காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா உடன்பாடு எட்டத்தவறியதால் ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்பு

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டத்தவறியதால் மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா உடன்பாடு எட்டத்தவறியதால் ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்பு
Published on

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2 ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கி விட்டது.

இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.

சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க கவர்னர் மறுத்து விட்டார்.

அடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார்.

சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரசின் எம்பியுமான சுப்ரியா சுலே கூறும்போது,

காங்கிரசின் ஆதரவு கோரி உயர்மட்ட தலைவர்களுடன் நாங்கள் நேரடியாக பேசுவோம். காங்கிரஸ் தலைவர்கள், சரத் பவாரின் சந்திப்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு நடக்கும் என கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறும்போது,

மராட்டியத்தில் அரசு அமைப்பதற்கான எந்தவொரு தார்மீகப் பொறுப்பும் காங்கிரசுக்கு இல்லை. உறுதியற்ற தன்மைக்கு எங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்துவது அர்த்தமற்றது. பாஜக மற்றும் சிவசேனாவின் தோல்வி, மாநிலத்தை ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது என கூறினார்.

சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகளில் பொதுவான உடன்பாட்டை எட்டத் தவறியதால் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க பாஜக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் இன்று வெளியிட்டு உள்ள ட்வீட்டில், ஒரு படகு அலைகளுக்கு அஞ்சினால் அது ஆற்றை கடக்காது. முயற்சிப்பவர்கள் ஒருபோதும் இழக்க மாட்டார்கள். உண்மையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத்தை இன்று சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

தேசியவாத காங்கிரசுக்கும் - காங்கிரசுக்கும் இடையே சந்திப்பு நடப்பது குறித்து இன்று திட்டமிடப்பட்டுள்ளதா? என்று சரத் பவாரிடம் நிருபர்கள் இன்று கேட்ட போது, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com