பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவது குறித்து பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தார். மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவது குறித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவது குறித்து பேச்சு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக திகழ்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலின்போது இருவருமே ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி பிரசாரம் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மே மாதம் 30-ந் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றபோது, அந்த விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 15-ந் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடந்தபோதும் அதில் கலந்து கொண்டு எந்த பலனும் இல்லை என்று கூறி மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக சந்திக்க மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.

எண்.7, லோக் கல்யாண் மார்க்கில் (ரேஸ்கோர்ஸ் சாலையின் புதுப்பெயர் இது) அமைந்துள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். 17-ந் தேதி பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு அவர் பூங்கொத்தும், குர்தாவும், ரசகுல்லாவும் வழங்கி வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சந்திப்புக்கு பின்னர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாகவும், பலன் அளிக்கும் விதத்திலும் அமைந்தது.

மேற்கு வங்காளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை (தியோச்சா பச்சாமி) தொடங்கி வைக்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.

மேற்கு வங்காளத்தின் பெயரை பங்களா என மாற்றுவது தொடர்பாக பிரதமரிடம் பேசினேன். இதற்கு எல்லா உதவிகளும் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்தார்.

பிரதமருடனான சந்திப்பு அரசியல் சார்பற்றது. உள்துறை மந்திரி அமித்ஷா நேரம் ஒதுக்கித்தந்தால் நாளை (இன்று) அவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீதான பிடி இறுகி வருகிற நிலையில் அது பற்றியும், அரசியல் ரீதியிலும் நிருபர்கள் கேள்விகள் எழுப்பியபோது மம்தா பானர்ஜி, தொல்லை தரும் கேள்விகளைக் கேட்காதீர்கள். இதுபற்றியெல்லாம் நான் பிரதமருடன் பேசவில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com