விண்வெளியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது!

மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் காலியாகிவிட்டது. அந்த விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
Image Courtesy: ISRO
Image Courtesy: ISRO
Published on

பெங்களூரு:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக கோளப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அதன் செயல்பாடு நின்றுள்ளது. இதன் மூலம் மங்கள்யான் விண்கலம் விடை பெற்று கொண்டது.

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:-

மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் காலியாகிவிட்டது. அதன் பேட்டரியும் செயலிழந்துவிட்டது. அந்த விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இதுகுறித்து இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கூறவில்லை. கிரகணம் காரணமாக அந்த விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. அடிக்கடி கிரகணங்கள் நிகழ்ந்தன. அதிலும் ஒரு கிரகணம் 7 மணி நேரம் நீடித்தது.

அந்த விண்கலம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் கிரகணத்தை தாங்கும் வகையில்தான் பேட்டரி அமைக்கப்பட்டது. நீண்ட நேரம் கிரகணம் நீடித்தால் அதனால் பேட்டரி செயல்படும் திறன் குறைந்துவிடும். இந்த மங்கள்யான் விண்கலம் சுமார் 8 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. அது 6 மாதங்கள் வரை செயல்படும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டது.

அந்த விண்கலம் தனது சிறப்பான பணியை செய்துள்ளது. அறிவியல் பூர்வ தகவல்களை வழங்கி உள்ளது. தொழில்நுட்பம், வடிவமைப்பு போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விண்கலத்தில் 15 கிலோ எடை கொண்ட 5 அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தி அனுப்பப்பட்டன என அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com