

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு (வயது89) கடந்த 13-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சோர்வாக காணப்பட்ட அவர் டெல்லி எயம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மன்மோகன் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நேற்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மன்மோகன் சிங்கை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.