அரசு திட்ட போஸ்டரில் பெண் பிரிவினைவாதியின் புகைப்படம்! விசாரணைக்கு உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் அரசு திட்ட போஸ்டரில் பெண் பிரிவினைவாதியின் புகைப்படம் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அரசு திட்ட போஸ்டரில் பெண் பிரிவினைவாதியின் புகைப்படம்! விசாரணைக்கு உத்தரவு
Published on

ஸ்ரீநகர்,

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு திட்டத்தை வழிநடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான ஜம்மு காஷ்மீர் அரசின் பிரசார போஸ்டரில் பாகிஸ்தான் பயங்கராவதி ஹபீஸ் சயீத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பெண் பிரிவினைவாதி ஆஷியா அன்ட்ரபியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

தெற்கு காஷ்மீரில் கோகெனாக் பகுதியில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் விதமாக பெண் சாதனையாளர்கள் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரில் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் புகைப்படத்துடன் பிரிவினைவாதி ஆஷியா அன்ட்ரபியின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது பெரும் சர்ச்சையாகியது. ஹுரியத் அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது துக்தரன்-இ-மில்லத் இயக்கம். இயக்கத்தின் தலைவியான ஆஷியா அன்ட்ரபி பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்.

பாகிஸ்தான் சுதந்திர தினவிழா அன்று ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியவர். அவருடைய பிரிவினைவாத செயல்பாட்டிற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது சிறையில் உள்ளார். ஆஷியா அன்ட்ரபிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளது. அவருடைய புகைப்படம் அன்னை தெரசா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கிரண் பேடி, கல்பனா சாவ்லா, லதா மங்கேஷ்கர், சானியா மிர்சா உள்ளிட்டோர் புகைப்படங்களுடன் போஸ்டரில் இடம்பெற்று இருந்தது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரசு திட்டத்திற்கான பிரசார போஸ்டரில் பிரிவினைவாதியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது தொடர்பாக மெகபூபா முப்தி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com