பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய மெகுல் சோக்சி

ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சி, டோமினிக்கா சென்றபோது கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய மெகுல் சோக்சி
Published on

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சி, டோமினிக்கா சென்றபோது கைது செய்யப்பட்டார்.

அவர் உள்ளிட்டோர் மீது மும்பையில் உள்ள தனிக்கோர்ட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்தநிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றை சி.பி.ஐ. அங்கு தாக்கல் செய்துள்ளது. அதில், மேலும் 4 பேரை குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது.

கூடுதல் குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. கூறியிருப்பதாவது:-

தனது வாடிக்கையாளருக்காக வெளிநாட்டு வங்கிகளிடம் உத்தரவாதம் அளிப்பதற்காக, வங்கிகள் கடிதம் அளிப்பது வழக்கம். அந்த வாடிக்கையாளர், வெளிநாட்டு வங்கியிடம் வாங்கிய கடனை செலுத்த தவறினால், உத்தரவாதம் அளித்த வங்கிதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டி இருக்கும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் பணியாற்றிய சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, மெகுல் சோக்சியின் 3 நிறுவனங்களுக்கு 165 உத்தரவாத கடிதங்களும், 58 வெளிநாட்டு கடன் கடிதங்களும் பெறப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், எந்த ஒப்புதல் வரம்பையும் கடைபிடிக்காமல், இவை அளிக்கப்பட்டன. ஏதேனும் தவறு நடந்தால் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக, வங்கியின் கணினி நெட்வொர்க்கில் இதை பதிவு செய்யவில்லை.

கடிதங்களை பயன்படுத்தி, அந்த நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் பெற்றன. ஆனால், அவற்றை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், அந்த வெளிநாட்டு வங்கிகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6 ஆயிரத்து 344 கோடியே 97 லட்சம் செலுத்த வேண்டியதாகி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com