

டமோ,
மத்திய பிரதேசத்தில் போபாலில் இருந்து 250 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நகரம் டமோ. இங்குள்ள அரசு பள்ளி கூடம் ஒன்றில் கழிவறை முன் மாணவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யப்படுகிறது. அதற்கான உபகரணங்கள் அனைத்தும் சமையல் செய்த பின் கழிவறையிலேயே வைக்கப்படுகிறது.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது சுய உதவி குழுக்கள். அவர்கள் உணவு தூய்மையுடன் தயார் செய்யப்படுகிறது என்பதனை உறுதி செய்வதில்லை என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சமூகத்தில் இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள் என கூறப்படுகிற நிலையில், அவர்களுக்கு வழங்கும் உணவு சுகாதாரமின்றி தயார் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய பிரதேச ஊரக வளர்ச்சி துறை மந்திரி கோபால் பார்கவ், இதுபற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட உள்ளேன் என கூறியுள்ளார். இதற்கு பொறுப்பு வகிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.