மோந்தா புயல்; ஆந்திராவில் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும்...? உஷார் நிலையில் இருக்க அரசு உத்தரவு

நிவாரண முகாம்களில் அதிக தரம் வாய்ந்த உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கிடைக்க செய்ய வேண்டும் என முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஐதராபாத்,
வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, புயலாக வலுவடைந்தது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும்.
புயல் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில், வடக்கு வடமேற்கே தொடர்ந்து நகர்ந்து வருகிறது. அது, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே இன்று மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்படுவதால் ஆந்திராவில் காற்று பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும். புயலை முன்னிட்டு ஆந்திராவின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகம் என 9 துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்றும் ஏற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி ஐதராபாத் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஸ்ரீனிவாச ராவ் கூறும்போது, ஆந்திர பிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும். பலத்த காற்றும் வீசும். பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாளபள்ளி மற்றும் முளுகு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், வடகிழக்கு மாவட்டங்கள் அனைத்திற்கும் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டு உள்ளது என்றார்.
ஆந்திர பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீன்பிடி படகுகள், புயலால், கரைக்கு திரும்ப முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், 30 படகுகள் கோபால்பூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. புயல் கடந்து செல்லும் வரை நிறுத்தி வைப்பதற்கு அந்த படகுகளுக்கு கஞ்சம் மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.
புயலானது ஆந்திராவின் கிழக்கு கடற்கரையை நெருங்கி வரும் சூழலில், உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, கடலோர பகுதிகளில் பாதிப்புகளை குறைக்கும்படி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
நிவாரண முகாம்களில் அதிக தரம் வாய்ந்த உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கிடைக்க செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளையும் நியமிக்க உத்தரவிட்டு உள்ளார். புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முழு பொறுப்பையும் மாவட்ட கலெக்டர்கள் கவனித்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






