

பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவிய பிறகு புதிதாக 1,916 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலத்தில் 3,877 ஐ.சி.யு. படுக்கைகள் உள்ளன. கொரோனாவுக்கு முன்பு மாநிலத்தில் 4,847 ஆக்சிஜன் படுக்கைகள் தான் இருந்தன. அதன் எண்ணிக்கை 28 ஆயிரத்து 447 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 378-ல் இருந்து 50 ஆயிரத்து 629 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் திரவத்தை சேமித்து வைக்கும் திறன் 292 டன்னில் இருந்து 1,207 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் 13 ஆயிரத்து 588 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டிகளின் எண்ணிக்கை 6,511 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்.