சகோதரி மீது தாய்க்கு அதிக பாசம்; சொந்த வீட்டில் திருமண நகைகளை கொள்ளையடித்த மகள்

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரித்ததில், பெண் ஒருவர் புர்க்கா அணிந்தபடி கமலேஷின் வீட்டுக்குள் சந்தேகப்படும்படி சென்றார்.
Courtesy:  ndtv
Courtesy:  ndtv
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உத்தம் நகரில் வசித்து வருபவர் கமலேஷ். இவருக்கு 2 மகள்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய வீட்டில் இருந்து பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் வந்து தடயங்களை சேகரித்தபோது, அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை.

வீட்டின் உட்புற கதவு உடைக்கப்படவில்லை. லாக்கர்களும் பூட்டியிருந்தன. யாரும் நுழைந்ததற்கான அறிகுறிகளும் இல்லை. நுழைவு வாசல் கதவும் உடைக்கப்படாமல் இருந்தது.இதனால், போலீசார் விசாரணை மேற்கொள்ள முடியாமல் திணறினர். இதன்பின்பு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரித்ததில், பெண் ஒருவர் புர்க்கா அணிந்தபடி கமலேஷின் வீட்டுக்குள் சந்தேகப்படும்படி சென்றார்.

இதுபற்றி போலீசின் தொழில்நுட்ப விசாரணையின் முடிவில், கமலேஷின் மூத்த மகள் சுவேதா (வயது 31) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவருடைய தாயார், இளைய சகோதரி மீது அதிகம் பாசம் காட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட பொறாமை உணர்வு, வெறுப்புணர்ச்சி ஆகியவை சுவேதாவிடம் அதிகரித்தது. இதுதவிர அவருக்கு சில கடன்களும் இருந்தன.

அந்த கடன்களை அடைக்க பெரிய திட்டம் தீட்டியுள்ளார். அவர் கொள்ளையடித்த நகைகளில் ஒரு சில சுவேதாவுடையது. அதனை தரும்படி தாயாரிடம் கேட்டிருக்கிறார். மற்றவை, இளைய சகோதரியின் திருமணத்திற்காக அவருடைய தாயார் சேர்த்து வைத்திருந்த நகைகள் ஆகும்.

கடந்த ஜனவரியில் சுவேதா வீட்டை விட்டு வெளியேறி புதிதாக ஒரு வீட்டை ஏற்பாடு செய்ய சென்றுள்ளார். அவருடைய இளைய சகோதரி வேலைக்கு சென்றதும் சுவேதாவை பார்க்க கமலேஷ் சென்று விடுவார். இதனை சுவேதா பயன்படுத்தி கொண்டு, ஒரு நாள் கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார்.

முதலில், தாயாரின் வீட்டுக்கான சாவிகளை திருடி கொண்ட அவர், காய்கறி வாங்க செல்கிறேன் என கூறி விட்டு புதிய வீட்டில் இருந்து கிளம்பி சென்றிருக்கிறார். அவர், பொது கழிவறை ஒன்றிற்கு சென்று புர்க்கா அணிந்து கொண்டு, தாயாரின் வீட்டுக்கு சென்று வாசல் கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்.

லாக்கரை திறந்து நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி விட்டார். கொள்ளை நடந்தது பற்றி அறிந்த கமலேஷ், அதுபற்றி சுவேதாவிடம் கூறியிருக்கிறார்.

அதனை கேட்டு, கவலை அடைந்தது போன்று அவர் நடித்திருக்கிறார். இதனால், ஒருவரும் அவரை சந்தேகிக்கமாட்டார்கள் என நினைத்துள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டார். அந்த நகைகளை விற்று விட்டேன் என போலீசிடம் கூறியிருக்கிறார். எனினும், போலீசார் அவற்றை கைப்பற்றி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com