

மும்பை,
மராட்டியத்தில் பன்வெல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு 12 மணி நேரத்தில் பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டதாக நவி மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குழந்தையை தேடி வந்தனர்.
அப்போது ஒரு ரகசிய தகவலின் பேரில், போலீசார் அங்குள்ள பிங்கர்வாடி கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்த போலீசார், பின்னர் குழந்தையை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்திய பெண்ணிடம் விசாரிக்கையில், குழந்தை தனியாக இருந்ததால், குழந்தையை கடத்தியதாக கூறினார். எனினும், அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.