மும்பை: மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை: போக்குவரத்து மாற்றம்

மும்பையில் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. #MumbaiPolice
மும்பை: மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை: போக்குவரத்து மாற்றம்
Published on

மும்பை,

மும்பையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கியது. பருவமழையை தொடர்ந்து இரு தடவை மழை வெளுத்து வாங்கியதில் மும்பை நகரம் வெள்ளக் காடாக மாறியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந் தேதி பெய்த கனமழைக்கு மும்பை மற்றும் தானேயில் சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள்.

அதன்பிறகு அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஓரிரு முறை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தபோதிலும், வெள்ளத்தின் பிடியில் இருந்து மும்பை நகரம் தப்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய கொட்டிய மழையால் நேற்று மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது.

தொடர்மழை காரணமாக நேற்று காலை 7.30 மணியளவில் மும்பை அந்தேரியின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ள கோகலே ரெயில்வே மேம்பாலத்தின் நடைமேம்பால பகுதி திடீரென தண்டவாளத்தின் மீது இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே, மாநகராட்சி மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 5 பேரை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக கூப்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்பையின் கிராண்ட் சாலையில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ், இந்த தகவலை, டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

மும்பை போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், கிராண்ட் சாலையில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து, கென்னடி பாலம் நோக்கி செல்லும் நானா சவுக் பகுதிக்கு போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர். மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பதிவுகள் அடங்கிய புகைப்படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் மும்பை போலீஸ் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com