

மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் நாகபாத ஜங்சன் பகுதியருகே போதை பொருள் கடத்தல் நடத்தப்பட உள்ளது என மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உளவு தகவல் சென்றது.
இதனை தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உசைன் பீ என்ற பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 1.8 கிலோ எடை கொண்ட போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இதுபற்றி வாரிய அதிகாரி சமீர் வாங்கடே செய்தியாளர்களிடம் கூறும்போது, காஷ்மீரில் இருந்து போதை பொருள் கடத்தப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலானது, சிறுவர்கள் மற்றும் பெண்களை பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி வாரிய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.