71 இடங்களில் 97 குழுக்கள்: நாடு முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பணி அமர்த்தப்பட்டனர்

நாடு முழுவதும் வெள்ள நிலைமையை சமாளிப்பதற்காக 71 இடங்களில் 97 குழுக்களை தேசிய பேரிடர் மீட்பு படை பணி அமர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளது.
71 இடங்களில் 97 குழுக்கள்: நாடு முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பணி அமர்த்தப்பட்டனர்
Published on

புதுடெல்லி,

மராட்டியம், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பருவ மழை வெளுத்துக்கட்டி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அந்த மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போய் உள்ளது.

இந்த நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளையும், மீட்பு பணிகளையும் கவனிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.), நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 71 இடங்களில் தனது 97 குழுக்களை பணி அமர்த்தி உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 45 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

மேலும் இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை, மத்திய நீர் ஆணையம் உள்ளிட்ட பிற அமைப்புகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

படைப்பிரிவின் கமாண்டர்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.

மழை, வெள்ளத்தால் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க ஏற்றவிதத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்திகளை வகுத்து செயல்படுத்த தயாராக உள்ளனர்.

நாட்டின் பல மாநிலங்களிலும் மழை, வெள்ள நிலவரத்தை டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

பருவ மழை, வெள்ளம் காரணமாக பேரழிவின் தாக்கத்தை குறைக்கிற வகையில் தேசிய பேரிடர் மீட்பு படை செயல்படும். அதற்கு ஏற்ப மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை அமர்த்தி உள்ளது.

ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள இடங்களை, அங்கு உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து அடையாளம் கண்டு, தேசிய பேரிடர் மீட்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் வெள்ளம் பாதித்த மாணிக்பூரில் இருந்து 68 பேரும், நலசோப்ரா மற்றும் பால்கரில் இருந்து 411 பேரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com