துண்டிக்கப்பட்ட காலை தலையணை ஆக்கிய விவகாரம் உ.பி. அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

துண்டிக்கப்பட்ட காலை தலையணை ஆக்கிய விவகாரத்தில் உ.பி. அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது. #RaniLaxmiBaiMedicalCollege
துண்டிக்கப்பட்ட காலை தலையணை ஆக்கிய விவகாரம் உ.பி. அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
Published on

லக்னோ,

ஜான்சியில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் அங்குள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இடதுகால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை நடந்து உள்ளது. அப்போது அவருடைய இடதுகாலை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் மற்றொரு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது அவருடைய தலைக்கு தலையணை வைக்காமல் மருத்துவர்கள் அவருடைய துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக வைத்து உள்ளனர். தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காகதான் கால் அகற்றப்பட்டது.

இதுதொடர்பான செய்திகள் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்தி வெளிஉலகிற்கு தெரியவந்ததும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சாத்னா கவுசிக், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் முதல்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல் கிடைக்கப்பெற்றதும் மாநில அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறிஉள்ளார்.

பத்திரிகை செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேச அரசின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இதுபோன்ற சமயங்களில் டாக்டர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்று மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com