

பாட்னா,
பீகார் மாநிலம் முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்ட காப்பகத்தில் தங்கி படித்துவந்த 44 சிறுமிகளில் 29 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காப்பகத்தில் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட போது வெளியாகிய அதிர்ச்சிகரமான தகவலில், ஒரு சிறுமி அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. காப்பகத்தில் தங்கிய சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பலாத்காரம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏதும் கிடைக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுவரும் போலீஸ், காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என மொத்தம் 11 பேரை கைது செய்தது. சிறுமிகள் பலாத்கார விவகாரத்தில் நிதிஷ் குமாருக்கு நெருங்கியவர்களுடன் தொடர்பு உள்ளது, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியது.
இவ்விவகாரம் நேற்று பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இது முக்கியமான விஷயமாகும். மாநில அரசிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டால், மத்திய அரசு அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளும், என்றார். சம்பவத்தை பீகார் அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யாது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட்டு மேற்பார்வையில் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று அம்மாநில சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன, வலியுறுத்தின. இதனையடுத்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. முசாபர்நகர் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்ள முதல்-மந்திரி நிதிஷ் குமார் பரிந்துரை செய்துள்ளார் என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பகத்தில் நடைபெற்ற சம்பவத்தை மிகவும் வருந்ததக்கது என குறிப்பிட்டு, மாநிலத்தில் வதந்திகள் பரவலை தடுக்கும் விதமாக வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை செயலாளர், போலீஸ் டிஜிபி, உள்துறை செய்லாளருக்கு உத்தரவிட்டுள்ளார் என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க பீகார் அரசுக்கும், போலீஸ் கமிஷ்னருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.