பெங்களூரு மெட்ரோவில் இந்தி மொழியில் தகவல் பலகை கிடையாது சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்தி மொழியில் தகவல் பலகைகள் வைக்கப்படாது என சித்தராமையா கூறிவிட்டார்.
பெங்களூரு மெட்ரோவில் இந்தி மொழியில் தகவல் பலகை கிடையாது சித்தராமையா திட்டவட்டம்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு, அதில் மெட்ரோ ரெயில்கள் ஓடுகின்றன. சுமார் 40 மெட்ரோ ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. அந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான தகவல் பலகைகளில் மூன்று மொழிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் அதில் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கன்னட அமைப்பினர் மற்றும் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்தி மொழியை நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மெஜஸ்டிக் மற்றும் சிக்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தகவல் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் மறைக்கப்பட்டு இருந்தது. சில கன்னட அமைப்புகள் இந்தி மொழியை கருப்பு மை போட்டு அழிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்தி மொழிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதையடுத்து தகவல் பலகைகளில் இந்தி மொழியை அகற்றுவதாக மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூருவில் தகவல் பலகைகளில், இருமொழி கொள்ளை மீறப்பட்டுள்ளதால் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தகவல் பலகைகளில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முதல்மந்திரி சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் கடிதம் எழுதியது. பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்தி மொழியில் தகவல் பலகைகள் வைக்கப்படாது என சித்தராமையா மத்திய அரசிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் தகவல் பலகையில் இந்தி மொழி இடம்பெற கூடாது என பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு தகவல் தெரிவித்து உள்ளது என சித்தராமையா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு, சித்தராமையா எழுதி உள்ள கடிதத்தில், போராட்டம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இந்திக்கு எதிரான போராட்டமானது சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் வன்முறை திரும்பிவிட்டது... ஆர்வலர்கள் மெட்ரோ ரெயில் பலகைகள், விளம்பரங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். இந்தி மொழியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, ரெயில் பயணிகள் கன்னட மற்றும் ஆங்கில மொழியை படிக்கவும், புரிந்துக் கொள்ளவும் வசதியாக உணர்கிறார்கள். மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடந்த சம்பவங்களை மாநில அரசு கடுமையான முறையில் கையாளுகிறது, மெட்ரோ ரெயில் பகுதியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கிறது என் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com