கல்வியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை; மராட்டிய முதல்-மந்திரி பேட்டி

கல்வியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என்று மராட்டிய முதல்-மந்திரி பேட்டி உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
கல்வியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை; மராட்டிய முதல்-மந்திரி பேட்டி
Published on

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து உள்ளதாக கடந்த 28-ந் தேதி மேல்-சபையில் சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக்(தேசியவாத காங்கிரஸ்) அறிவித்தார்.

ஆனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார். ஏக்நாத் ஷிண்டேயின் இந்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் முஸ்லிம்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு தொடர்பான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என மந்திரி நவாப் மாலிக் உறுதிபட தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று கூறினார். இந்தநிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து சட்டசபை வளாகத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக எந்த திட்டமும் அரசிடம் இல்லை. அந்த திட்டம் என்னிடம் வரவில்லை. இது குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை. இந்த கோரிக்கை வரும்போது, அது பற்றி பார்க்கலாம். இந்த பிரச்சினையை முன்வைத்து சட்டசபையில் அமளியை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் (பாரதீய ஜனதாவினர்), விவாதத்தின்போது குரல் எழுப்ப தயாராக இருப்பதற்கு சக்தியை சேமித்து வைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com