

புதுடெல்லி
திரைப்பட இயக்குநரும் முன்னாள் தணிக்கை வாரிய தலைவருமான பஹ்லாஜ் நிஹலானி தன்னை பதவி நீக்கியதன் பின்னணியில் இந்து சர்க்கார் படத்தை வெட்டுக்கள் ஏதுமின்றி வெளியிட அனுமதித்ததே காரணம் என்று கூறியுள்ளார்.
இந்து சர்க்கார் படம்தான் என் நீக்கத்திற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்றார் பஹ்லாஜ். தனியார் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் உட்தா பஞ்சாப் படத்தை வெளியிட அனுமதியளிக்க வேண்டாம் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையிடமிருந்து அழுத்தம் தரப்பட்டதாக கூறினார். வாரியம் படத்தை 89 வெட்டுக்களுடன் வெளியிட அனுமதித்தது. ஆனால் பின்னர் நீதிமன்றம் சிறு வெட்டுக்களுடன் படத்தை வெளியிட ஆணையிட்டது. இது போலவே சல்மான் கானின் பஜ்ரங் பாய்ஜான் (2015) படத்தையும் ஈத் பண்டிகைக்கு முன்னர் வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார். அப்படத்தின் தலைப்பே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது என்றார் அவர். ஆனால் படத்தின் கதையைக் கேட்டு விட்டு வழிகாட்டு நெறிகளோடு படத்தை பார்க்கும்படி அமைச்சகத்தை கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார். ஆனால் சல்மான் கானும், இயக்குநர் கபீர் கானும் என்னை வில்லனாக சித்தரித்தனர் என்றார் அவர்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் கேங்ஸ் ஆஃப் வாசேயப்பூர் படத்தை தனிச் சான்றிதழ்களோடு வெளியிட கோரிக்கை விடுத்தார் என்றும் பஹ்லாஜ் கூறினார்.
தனக்கு பின்னர் பதவி ஏற்றுள்ள பிரசூன் ஜோஷி தனது பாவ, புண்ணியங்களின் பலன்களை அறுவடை செய்வார் என்றார் அவர்.
சென்ற வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஹ்லாஜ் நிஹலானி தேவையற்ற வெட்டுக்களை படங்களில் கோருவதாகவும், அறநெறி போதிக்கும் போலீசாக நடந்து கொள்வதாகவும் பல குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் அவர் பதவி காலத்தில் எழுந்தன.