பயணிகள் கூடுதலாக லக்கேஜ்கள் கொண்டு சென்றால் கடுமையான அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

பயணிகள் கூடுதலாக லக்கேஜ்கள் கொண்டு சென்றால் கடுமையான அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #Railway
பயணிகள் கூடுதலாக லக்கேஜ்கள் கொண்டு சென்றால் கடுமையான அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு
Published on

புதுடெல்லி,

விமானங்களில் பயணிகள் கொண்டு வரும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிப்பது போல், ரயில் பயணிகளும், இனி தாங்கள் கொண்டு செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணத்துடன் அபராதமும் கட்ட வேண்டிய நிலை ஏற்பட உள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன.

பயணிகள் தாங்களுடன் கொண்டு வரும் உடைமைகளை கணக்கிட்டு, ரயில்வே நிர்வாகம் கெடுபிடிகள் காட்டப்படுவதில்லை என்பதால், அதிக அளவு லக்கேஜ்களை பயணிகள் கொண்டு வருவதாகவும், இதனால் பல நேரங்களில் சக பயணிகள் புகார் தெரிவிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, விமான நிறுவனங்களை போல, பயணிகள் கொண்டு வரும் கூடுதல் லக்கேஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் லக்கேஜ்களுக்கு முன்கூட்டியே புக் செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த லக்கேஜ்கள் லக்கேஜ்வேனில் வைக்கபடும் என்பதுதான் ரயில்வே விதியாகும்.ஆகவே, கட்டணம் செலுத்தாமல் இனி கூடுதலாக லக்கேஜ்களை கொண்டு வந்தால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டணத்தில் இருந்து ஆறு மடங்கு தொகை கூடுதலாக அபராதமாக விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து பகுதிகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த விதிகளை தீவிரமாக அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தில், பயணிகளின் அனைத்து உடைமைகளையும் எடை வைத்து வழங்கப்படுவது போல் அல்லாமல், ஆங்காங்கே சோதனைகள் நடத்தி பயணிகளின் கொண்டு வரும் லக்கேஜ்களின் எடையை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என தெரிகிறது.

ரயில்வே விதிப்படி, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணி, 70 கிலோ வரை கட்டணம் இல்லாமலும், அதிகபட்சமாக 150 கிலோ வரை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். ஏசி. இரண்டடுக்கு பெட்டியில், 50 கிலோ வரை கட்டணம் இன்றியும் அதிகபட்சமாக 100 கிலோ வரையிலான உடமைகளையும் எடுத்துச்செல்லலாம். படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்கும் பயணிகள், முறையே, 40 கிலோ, 35 கிலோ வரை எடுத்துச்செல்லலாம். அதிகபட்சமாக 80 கிலோ மற்றும் 70 கிலோ வரை எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com