

புதுடெல்லி,
மியான்மர் நாட்டின் தலைநகர் யங்கோனில் நடக்கிற சம்வத் - மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு உலகளாவிய முனைப்பு மாநாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ பேச்சு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இருபத்தோராம் நூற்றாண்டின் இடையேயான இணைக்கப்பட்ட மற்றும் உள்சார்ந்த உலகமானது, பல்வேறு உலகளாவிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதம் தொடங்கி பருவநிலை மாற்றம் வரையிலான சவால்கள் வரை இதில் அடங்கும்.
பேச்சு வார்த்தைதான் தீர்வு
ஆசியாவின் மிகப்பழமையான, பாரம்பரியமான பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தின்மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன்.
நானும் பழங்கால இந்தியாவின் தயாரிப்புதான். கடினமான பிரச்சினைகளில் பேச்சு வார்த்தைதான் தீர்வு தேடித்தரும் என்பது என்னுடைய நம்பிக்கை.
உலகமெங்கும் ஆழ்ந்து வேரூன்றிய மத அடிப்படைகள் மூலம் சமூகங்களைப் பிளவுபடுத்தி, நாடுகள், சமூகங்களுக்கு இடையேயும் மோதல்களை விதைத்து வருவதற்கு தீர்வு காண ஒரே வழி பேச்சு வார்த்தை மட்டும்தான்.
தர்க்க சாஸ்திரம்
பழங்கால இந்தியாவின் கருத்துருவான தர்க்க சாஸ்திரம், பேச்சு வார்த்தை, விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், கருத்து பரிமாற்றங்கள், மோதல்கள் தவிர்ப்பு மாதிரியாக உருவாக்கப்பட்டதாகும்.
பல்வேறு மதங்களில், நாகரிகங்களில், பன்முக ஆன்மிக தேடலில் வேரூன்றி உள்ள சிந்தனைகளின் தேடல் வழியே பதில்களைத் தேடுவது என்பது, மனிதர்களின் இயல்பு.
தர்மத்தை நிலைநாட்டுவது...
ராமபிரான், கிருஷ்ணர், புத்தர், பக்தபிரகலாதன் ஆகியோரின் செயல்களின் நோக்கம் என்பது தர்மத்தை நிலைநாட்டுவதுதான். இது பண்டைய காலத்தில் இருந்து நவீன காலம் வரை தொடர்ந்து வருகிறது.
மனிதர்கள் இயற்கையோடு ஒட்டி உறவாட வேண்டும். அதை திருத்தி சுரண்டுவதில் மட்டுமே குறியாக இருக்கக்கூடாது.
ஒரு மனிதர் இயற்கையை வளர்க்கவில்லை என்றால், பருவநிலை மாற்ற வடிவில் இயற்கை பிரதிபலிக்கிறது.
சுற்றுச்சூழல் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் எந்தவொரு நவீன சமூகத்திலும் தேவைப்படுகிறது. அதே வேளையில், அவை இயற்கைக்கு ஒரு குறைந்த அளவிலான பாதுகாப்பைத்தான் கொடுக்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.