

புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு
சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தமிழகத்தில்கூட மத்திய அரசு இந்த சட்டங்களை வாபஸ்பெறக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுதொடர்பாக நாங்களும் கடிதம் கொடுத்துள்ளோம். தமிழகத்தைப்போல் புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றார்.
தொடர்ந்து இந்த கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:-
துணை சபாநாயகர் ராஜவேலு:- உங்கள் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
செந்தில்குமார் (தி.மு.க.):- தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் பல மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கம்
நாஜிம் (தி.மு.க.):- மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகளின் நிலங்களை கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் இந்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அசோக்பாபு (பா.ஜ.க.):- எந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று சொல்லுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்:- வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுச்சேரியில் எந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு பேசவேண்டாம். டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் கூட பஞ்சாபை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் தான். இந்தியாவில் வேறு எங்கும் போராட்டம் நடத்தவில்லை.
அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார்:- விவசாயிகளுக்கு ஆதரவாகத்தன் சட்டம் உள்ளது. புதுவை விவசாயிகளுக்கு இந்த சட்டத்தால் என்ன பாதிப்பு? அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதை ஏற்க முடியாது.
காரசார வாக்குவாதம்
(இதுகுறித்து பா.ஜ.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சபையை நடத்திய துணை சபாநாயகர் ராஜவேலு அனைவரது மைக் இணைப்பினையும் துண்டிக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சபையில் இல்லை.)
அமைச்சர் நமச்சிவாயம்:- தமிழகம், புதுவையில் எத்தனை விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்?
சிவா:- இதுதொடர்பாக விவாதம் வையுங்கள். பாதிப்பு யாருக்கு என்று நாங்கள் கூறுகிறோம். இதற்காக உங்கள் கூட்டணியில் இருந்த ஒரு மத்திய மந்திரியே ராஜினாமா செய்துள்ளார்.
வைத்தியநாதன் (காங்):- மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவானது.
நாஜிம்:- சபைக்கு முதல்-அமைச்சர் வந்ததும் இதுகுறித்து பேசுவோம்.
(சிறிதுநேரம் கழித்து இந்த பிரச்சினை மீண்டும் சபையில் வெடித்தது.)
கொள்கையை பேசுவோம்
வி.பி.ராமலிங்கம் (பா.ஜ.க.):- நாம் எப்போதும் புதுவை மக்கள் நலன்கருதி தான் சபையில் பேசுகிறோம். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறினால் கடந்த காலங்களைப்போல் புதுவையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
சிவா:- எங்கள் கட்சிக்கென்று அடிப்படை கொள்கை உள்ளது. அந்த வழியில் வந்த நாங்கள் எங்கள் கட்சியின் கொள்கையை பேசுவோம். எங்கள் தேவைக்காக நாங்கள் பேசவரவில்லை.
நாஜிம்:- எங்களை மிரட்டுகிறீர்களா?
துணை சபாநாயகர் ராஜவேலு:- அவரவர் கட்சியின் கொள்கையை சொல்வது தவறல்ல.
வி.பி.ராமலிங்கம்: நல்லது செய்தால் பாராட்டுங்கள். ஒரேயடியாக குறை கூறாதீர்கள்.
(அதைத்தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. சிறிது நேரத்தில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தார்.)
காரசார மோதல்
சிவா:- வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். இதுதொடர்பாக விவாதம் நடந்த வேண்டும்.
அசோக்பாபு: வேளாண் சட்டத்தில் என்ன பாதகம் உள்ளது என்று தெளிவுபடுத்துங்கள்.
சிவா:- கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டம் இது. உலகமே இந்த சட்டத்தை கண்டிக்கிறது. முதலில் இந்த சட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?
நாஜிம்:- அதில் என்னனென்ன குறைகள் உள்ளது என்பதை இந்த சபையில் விவாதித்தால் மக்களுக்கு தெரியும்.
(தொடர்ந்து பா.ஜ.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதுதொடர்பாக காரசாரமாக மோதிக் கொண்டனர்)
வெளிநடப்பு
சிவா:- விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு கூறிவிட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக.தியாகராஜன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வௌநடப்பு செய்தனர்.
தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோரும் வெளியேறினர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நேரு, பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக நேரு எம்.எல்.ஏ. கூறும்போது, மத்திய அரசின் வேளாண் சட்டம் தொடர்பாக சபையில் விவாதித்திருக்க வேண்டும். ஆனால் அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. விவசாய சட்டத்தில் என்னென்ன சாதக பாதகங்கள் உள்ளது என்பதையும் தெரிவிக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.