பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு - சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமான கத்திகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு - சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது
Published on

பெங்களூரு,

சசிகலா அடைக்கப்பட்டு உள்ள பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ஏராளமான கத்திகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாகவும், சிறைக்குள் இருந்தாவாறே சில ரவுடிகள் தங்கள் கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் நேற்று காலையில் சிறையில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

சிறையில் உள்ள கைதிகளின் அறைகள், முக்கிய ரவுடிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சில கைதிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் அறையிலும் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சோதனையின் போது சிறைக்குள் கத்திகள், கத்திரிக்கோல், பிளேடு, கஞ்சா பொட்டலங்கள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள், கஞ்சா பயன்படுத்த உபயோகிக்கப்படும் குழாய்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த பொருட்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கைதிகளுக்கு செல்போன், சிம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்தி உள்ளிட்ட பொருட்கள் சிக்கியிருப்பது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனை குறித்து போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பெங்களூரு நகரில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து கொண்டே சில ரவுடிகள், வெளியில் இருக்கும் தங்களது கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபடுவது பற்றியும் தகவல் கிடைத்தது.

எனவே பரப்பனஅக்ரஹாரா சிறையில் சோதனை நடைபெற்றது. சிறை முழுவதும் ஒவ்வொரு பகுதியையும் விடாமல் சோதனை மேற்கொண்டோம். இதில் சிறைக்குள் இருந்து 37 கத்திகள், கஞ்சா, செல்போன்கள், சிம் கார்டுகள் என ஏராளமான பொருட்கள் சிக்கியுள்ளன. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்தீப் பட்டீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com