மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவடைந்துள்ளது.
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.மக்களவை விவாதம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றிய இந்த முதல் உரையில் பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார்.

மேலும் சிவபெருமான், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகிய கடவுள்களின் படங்களை அவையில் காட்டி பேசினார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவேசமாக பதில் அளித்ததால், விவாதத்தில் அனல் பறந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே 2 மணி நேரம் 16 நிமிடம் மோடி உரையாற்றினார். இதில், மக்களவைத் தேர்தல் வெற்றி, ராகுல் காந்தியின் பேச்சு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார். அவரது உரைக்கு பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

பிரதமர் மோடி பேசிய பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com