

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் ஓமைக்ரான் பரவல் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் இன்றுமுதல் 60 வயதை கடந்தவர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் ஊசி போடப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச் சிறந்த வழிமுறை தடுப்பூசியே என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்தியா முன்னெச்சரிக்கை தடுப்பூசி மருந்துகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இன்று தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராட்டுக்கள். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் அறிந்தபடி, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளில் தடுப்பூசியே உள்ளது என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.