மணிப்பூரில் 3 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த வீடுகள் தயாராகிறது

மணிப்பூரில், கலவரத்தால் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ள 3 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த ஆயத்த வீடுகள் தயாராகி வருகிறது.
மணிப்பூரில் 3 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த வீடுகள் தயாராகிறது
Published on

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே 3-ந் தேதி தொடங்கிய கலவரத்தால் 160 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அவர்களை குடியமர்த்த 5 இடங்களில் வீடுகள் கட்டும் பணி, கடந்த ஜூன் 26-ந் தேதி தொடங்கியது.

ரெடிமேட் கட்டமைப்புகள், தகர கூரைகள் ஆகியவற்றை கொண்டு இந்த வீடுகள் உருவாக்கப்படுகின்றன. 3 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த இந்த வீடுகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

160 தொழிலாளர்கள்

ஒவ்வொரு வீட்டிலும் 2 அறைகளும், ஒரு கழிவறையும் இருக்கும். பொதுவான சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வரிசையில் 10 வீடுகள் அமைந்திருக்கும்.

ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், 160 தொழிலாளர்கள் மின்னல் வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதால், கட்டுமான பொருட்களை கொண்டு வருவதுதான் சவாலாக இருந்ததாக என்ஜினீயர் தெரிவித்தார். புதிய வீட்டுக்கு குடிபோவது நல்ல விஷயமாக கருதப்பட்ட போதிலும், தங்கள் சொந்த வீட்டுக்கு செல்லத்தான் முகாமில் தங்கி இருப்பவர்கள் விரும்புகிறார்கள்.

முதல்-மந்திரி அழைப்பு

இதற்கிடையே, இம்பால் நகரில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்-மந்திரி பிரேன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது:-

சில சந்தேகங்களும், தீய சக்திகளின் செயல்பாடுகளும், வெளிநாட்டு சதியும்தான் கலவரத்தில் உயிரிழப்புகளுக்கும், சொத்துகள் சேதத்துக்கும் காரணங்கள் ஆகும்.

அனைவரும் வன்முறையை கைவிட்டு, விரைவான வளர்ச்சியை மீண்டும் கொண்டுவர பாடுபட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தற்காலிக வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்பு. எனவே, மறப்போம், மன்னிப்போம் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com