

புதுடெல்லி,
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவை கலைக்கும் தீர்மானம் நிறைவேறிய பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சென்று சந்தித்த பிரதமர் மோடி தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களையும் சமர்ப்பித்தார். புதிய அரசு உருவாகும் வரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.
இதற்கு மத்தியில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமைத்தேர்தல் ஆணையர், ஜனாதிபதியிடம் அளித்தார். இந்த நிலையில், அமைச்சரவை பரிந்துரையை ஏற்று , 16-வது மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.