சிறு, நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு கிடைத்தால் சீனாவுடன் பஞ்சாப் போட்டியிட முடியும்: ராகுல்காந்தி

சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்தால், பஞ்சாபில் உள்ள லூதியானா, சீனாவுடன் போட்டியிட முடியும் என்று ராகுல்காந்தி கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லூதியானா,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடக்கும் காங்கிரஸ் பாதயாத்திரை பல மாநிலங்களை கடந்து, பஞ்சாப் மாநிலத்தை அடைந்தது. நேற்று முன்தினம் அங்குள்ள பதேபூர்சாகிப் மாவட்டம் சிர்ஹிந்தில் இருந்து தொடங்கியது.

நேற்று லூதியானா மாவட்டம் தோரஹாவில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. ராகுல்காந்தியுடன் சென்ற தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தி சென்றனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர்சிங் ராஜா வாரிங், முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.

யாத்திரைக்கிடையே லூதியானாவில் பொதுமக்களிடையே ராகுல்காந்தி பேசினார். அவர் பேசியதாவது:-

நாட்டில் வெறுப்பு, வன்முறை, அச்சம் பரப்பப்படுகிறது. சகோதரருக்கு எதிராக சகோதரரையும், மதத்துக்கு எதிராக மதத்தையும், சாதிக்கு எதிராக சாதியையும் மோத விடுகிறார்கள். லட்சக்கணக்கானோர் வெறுப்பு சந்தையில் கடை திறந்துள்ளனர். ஆனால் இந்த யாத்திரையில் வெறுப்பையே பார்க்க முடியாது. யாராவது கீழே விழுந்தால், என்ன சாதி, மதம் என்று கேட்காமல் ஒவ்வொருவரும் உதவ ஓடி வருவார்கள்.

இதுதான் இந்தியாவின் வரலாறு. பஞ்சாபின் வரலாறு. இதைத்தான் சீக்கிய குரு குருநானக் ஒட்டுமொத்த உலகத்துக்கும் போதித்தார். வெறுப்புக்கும், வன்முறைக்கும் நாட்டில் இடமே இருக்கக்கூடாது. இது சகோதரத்துவ நாடு.

லூதியானா, இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போன்றது என்று என்னிடம் சொன்னார்கள். அது தவறு. மான்செஸ்டர்தான், லூதியானா போன்றது. மான்செஸ்டருக்கு எதிர்காலம் இல்லை. ஆனால் லூதியானாவுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட லூதியானா எப்படி பாதிக்கப்பட்டது? பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், தவறாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யும்தான் காரணங்கள். அவை கொள்கைகள் அல்ல, லூதியானாவின் கதையை முடித்த ஆயுதங்கள்.

சீனாவுடன் போட்டி

இங்குள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி ஆதரவும் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவும் கிடைக்கவில்லை. அப்படி ஆதரவு கிடைத்திருந்தால், லூதியானா நகரம், சீனாவுடன் போட்டியிட முடியும்.

நாட்டில் உள்ள கோடீசுவரர்கள் வேலைவாய்ப்பு அளிக்க மாட்டார்கள். ஆனால், லூதியானாவின் சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் என்று அவர் பேசினார்.

லோரி திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலையில் பாதயாத்திரை நடக்கவில்ல். இன்றும் விடுமுறை விடப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) மீண்டும் பாதயாத்திரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com