ரபேல் போர் விமான வழக்கு விசாரணை அக்டோபர் 10–க்கு ஒத்திவைப்பு

ரபேல் போர் விமான வழக்கு விசாரணை அக்டோபர் 10–க்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரபேல் போர் விமான வழக்கு விசாரணை அக்டோபர் 10–க்கு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் தசால்த் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி அரசு 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி போர் விமானங்களை வாங்குவதற்கு தடை விதிக்கக் கோரியும் இது தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், தொழில் அதிபர் அனில் அம்பானி, தசால்த் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல். சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு அதன் மீதான விசாரணை செப்டம்பர் 18ந் தேதி (நேற்று) நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தனக்கு அவகாசம் அளிக்குமாறு கோரினார். அதற்கு நீதிபதிகள், உடல் நலக்குறைவு காரணமாக வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று நீங்கள் கடிதம் எழுதி இருக்கிறீர்கள். இப்போது கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள். எனவே இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 10ந் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என்று குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com